முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாராந்திர லாட்டரிகளுக்கு பதிலாக தினசரி லாட்டரிகளை நடத்த -கேரள அரசு முடிவு

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூலை - 9 - வாராந்திர லாட்டரிகளுக்கு பதிலாக தினசரி லாட்டரிகளை நடத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று மாநில நிதியமைச்சர் தமது பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டார். கேரளாவில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி நேற்று தனது முதல் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. 2011-12 ம் ஆண்டுக்கான திருத்தி மதிப்பிடப்பட்ட பட்ஜெட்டை கேரள நிதி அமைச்சர் கே.எம்.மணி நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். முதியோர் உதவித் தொகையை ரூ. 300 இல் இருந்து ரூ. 400 ஆக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் பல திட்டங்களையும் இந்த பட்ஜெட்டில் மணி அறிவித்தார். மேலும் மதுபானங்கல், பான் மசாலாக்கள், சொகுசு கார்கள், ஆடம்பர மாளிகைகள் ஆகியவற்றுக்கான வரி இந்த பட்ஜெட்டில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட்டில் வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. கூடுதலாக் ரூ. 600 கோடி வருமானம் வரும் வகையில் வரி மாற்றங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் மதுபானம் அருந்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த அபாயத்தை குறைக்கும் நோக்கத்தில்தான் மதுபானங்களுக்கு வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மணி கூறினார். இந்த மதுபான வரி உயர்வின் மூலம் அரசுக்கு ரூ. 192 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் பான் மசாலாக்கள் மீதான வரி உயர்வு மூலம் ரூ. 5 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் மணி தெரிவித்தார். தற்போது கேரளாவில் நடத்தப்பட்டு வரும் வாராந்திர லாட்டரி குலுக்கல்கள் இனி தினசரி  லாட்டரி குலுக்கல்களாக கொண்டுவரப்படும். இதனால் அரசுக்கு ரூ. 263 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். சொகுசு கார்களுக்கு 2 சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல 4000 சதுர அடிக்கு மேற்பட்ட சொகுசு பங்களாக்கள் மீது இரண்டு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் ஒன்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு சமீப காலமாக வின்-வின் என்ற வாராந்திர லாட்டரியை மட்டும் நடத்திவந்தது. மேலும் விழாக்கால பம்பர்களையும் அவ்வப்போது நடத்திவருகிறது. ஆனால் தற்போதைய அரசு வாராந்திர லாட்டரிகளுக்கு பதிலாக தினசரி லாட்டரியை நடத்த முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!