முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடன்குளம் அணுமின் நிலைய விவகாரம்: மேலும் ஒருவர் கைது

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை ஜூலை-21 - கூடன்குளம் அணுமின் நிலையத்தில் போலிபெயர் மற்றும் போலி முகவரியில் தங்கியிருந்து வேலைப்பார்த்த வாலிபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அந்த வாலிபரிடம் உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்யநாட்டு தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி துவங்கும் என்று அணுமின் நிலைய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். அணுஉலை அமைக்கப்படும் பகுதி மிகவும் பாதுகாப்பான பகுதி என்பதால் அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு சாபர் பூஞ்ச் என்ற தனியார் நிறுவனம் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் என்பவரது மகன் சுபத் பஸ்வான் என்பவர் கடந்த 18 மாதங்களாக  தங்கியிருந்து பணியாற்றி வந்தார். இவர் அடிக்கடி அணுமின்நிலைய பகுதிகளை ரகசியமாக நோட்டமிட்டுவந்ததாக தெரிகிறது. இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர் பீகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல என்பதும். அவர் உத்திரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி ஆசாத்கான் என்பவரது மகன் முகமது மீராகான்(25) என்பது தெரியவந்துள்ளது. அவர் போலி பெயர் மற்றும் போலி முகவரியில் அங்கு தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் எதற்காக மாற்று பெயரில் தங்கியிருந்தார், அவருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா என்று உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபர் கூடன்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கூடன்குளம் அணுமின்நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேபோல் போலி முகவரியில் யாரும் தங்கி இருக்கின்றனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அஞ்சுகிராமம் மேட்டுக்குடியிருப்பை சேர்ந்தவர் ரகுநாத் (வயது 45). இவர் கம்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீராகானுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் இவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!