முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிக்க வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, செப்.6 - ஊழலை ஒழிக்க வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழல்களைக் கட்டுப்படுத்த விரைவிலேயே புதிய வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. ஊழல் அல்லது முறைகேடான செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மீதான புகார்களை உடனடியாக விசாரித்து தண்டனைகளை உடனுக்குடன் வழங்குவது அதில் முக்கிய இடம் பெறுகிறது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய 3 நிபுணர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.  இக்குழு அரசு அலுவலர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ளலாம், விசாரணையை எப்படித் துரிதப்படுத்தலாம், எந்தெந்த குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்கும். அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மீதான எல்லா பெரிய குற்றச்சாட்டுகளுமே அதிகபட்சம் 12 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். சிறிய தவறுகளாக இருந்தால் ஓரிரு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.  அரசு அலுவலர்களை பணியிலிருந்து நீக்குவதுகூட தண்டனையாக இருக்கலாம். விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடக்க பதவியில் இருக்கும் அதிகாரிகளுடன் ஓய்வுபெற்ற அதிகாரிகளையும் கொண்ட குழுக்களை ஏற்படுத்தி விசாரிக்கலாம். இந்தக் குழுவில் இடம்பெறும் அதிகாரிகள் நேர்மையாக விசாரணை நடத்தி அவர்களுக்கு விசாரணைக் காலத்தில் முறையான படிகளையும் சன்மானத் தொகையையும் அரசே வழங்க வேண்டும். அரசு ஊழியர் தானே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை ஓரளவு குறைக்கலாம். அதிகபட்ச தண்டனையாக பணியிலிருந்து கட்டாய ஓய்வு தருவதுடன் அவரது பணிக்கொடை, ஓய்வூதியம் ஆகியவற்றை ரத்துசெய்து விடலாம் என்று பரிந்துரைக்கப்படும் என்று தெரிகிறது. ஊழலுக்காக அரசு அலுவலரை பதவியில் இருந்து நீக்க அரசியல் சட்டத்தின் 311-ம் பிரிவில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்