முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிகள் இணைப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 19 - நதிகள் இணைக்கும் திட்டத்தால் பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றால் அதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நதி நீர் இணைப்பு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ஆஜரானார். திட்டத்துக்கு ஆகும் செலவு பற்றிய அறிக்கையை இன்னும் ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அவரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். 

நதிகள் இணைப்புக்கு எவ்வளவு செலவாகும்? நதிகள் இணைக்கும் போது நிலங்களும் கையகப்படுத்தப்படுமா? என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதுதான் எங்களது கவலை. அதிக நிதிச்சுமை ஏற்படும் என தெரியவந்தால் இந்த திட்டத்தை ஆதரித்து தீர்ப்பு வழங்க மாட்டோம் என்பதையும் இப்போதே தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நதிகளை இணைக்கும் திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்வைத்தது. இதற்கான நடவடிக்கை குழுவை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமைத்தார். இது தொடர்பான முதல் நிலை அறிக்கையை அந்த குழு தாக்கல் செய்தது. தீபகற்ப நதிகள் மற்றும் இமயமலை நதிகள் என இரு வகையாக பிரித்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு அக்குழு யோசனை தெரிவித்திருந்தது. தீபகற்ப நதிகளுக்கு இடையே 16 இணைப்புகளை ஏற்படுத்த அதில் திட்டமிடப்பட்டிருந்தது. 

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை, காவிரி போன்ற நதிகளின் உபரி நீரை திருப்பி விடுவது தொடர்பான பணிகள் பற்றி இந்த குழு விவரித்திருந்தது. கேரளம், கர்நாடகம், மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்புவது, மேற்கு கடலோரம் பாயும் சிற்றாறுகளை இணைப்பது, யமுனை நதியில் கிளை நதிகளை இணைப்பது போன்றவையும் இத்திட்டத்தின் கூறுகளாகும். 

இமயமலை நதி இணைப்பு திட்டத்தின் கீழ் கங்கை, பிரம்மபுத்திரா, அவற்றின் கிளை நதிகளில் நீர்த்தேக்கங்களை அமைத்து பாசனத்திற்கும், மின்சார தயாரிப்புக்கும் பயன்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் வெள்ளப் பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

நதிகளை இணைப்பதன் மூலம் 2050 ல் 16 கோடி ஹெக்டேர் நிலத்துக்கு பாசன வசதி செய்ய முடியும். பாரம்பரியமான பாசன முறைகள் மூலம் இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக 14 கோடி ஹெக்டேர் பரப்புக்கு மட்டுமே பாசனம் செய்ய முடியும் என்பது நதிகள் இணைப்பு குழுவின் கருத்தாகும். சுமார் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2016 ம் ஆண்டில் நிறைவடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான முதல் நிலை பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்