முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க மாயாவதிக்கு உத்தரவு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

அலகாபாத்,அக்.22 - 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மாயாவதி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் நொய்டா விரிவாக்கம் இந்த பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மாயாவதி அரசு கையகப்படுத்தியது.  

அதே போல் கவுதம்புத்தர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமங்களிலும் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அரசு கையகப்படுத்திய நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே ஆயிரக்கணக்கான வீடுகள் விற்கப்பட்டுவிட்டன. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 491 பேரும், சில கிராமத்தினரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் அகோக்பூஷன், எஸ்.யு.கான், வி.கே. சுக்லா, ஆகியோர் கொண்ட சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது;

வளர்ச்சிப்பணிகளுக்காக என்று கூறி விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள், பணக்காரர்கள் பயன்பெறும் வகையில், நவீன நகரங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில் விவசாயிகளின் நலன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே தியோலா, சாக்ஷாபெரி, அசதுல்லாபூர் ஆகிய கிராமங்களில், விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது. நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். இந்த நிலத்துக்காக விவசாயிகள் யாராவது ஏற்கனவே நஷ்டஈடு பெற்றிருந்தால் அதை அவர்கள் திரும்ப செலுத்தி விட்டு நிலத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலங்களில் மேற்கொண்டு கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்படுகிறது. 

இது தவிர கவுதமபுத்தர் நகர் மாவட்ட கிராமங்களில் கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு கூடுதலாக நஷ்டஈடு தொகை வழங்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!