முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`ஓஸ்தி' படத்தை வெளியிட விடாமல் தடுக்க சதி நடக்கிறது-டி.ராஜேந்தர்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.- 5 - சிம்பு நடித்த `ஒஸ்தி' படத்தை வெளியிட விடாமல் தடுக்க சதி நடக்கிறது என்று டி.ராஜேந்தர் கூறினார்.  இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒஸ்தி படம் வருகிற 8-ம் தேதி வெளியிட உள்ளோம். தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்கிறார்கள். இந்த படத்தை வெளியிட விடாமல் சதி நடக்கிறது. கோவை, திருப்பூர் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் போட்டி விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்தி கட்ட பஞ்சாயத்து செய்கிறார். இவர் சங்கம் நடத்தக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தும் அதை மீறி அவர் சங்கம் நடத்துவது எப்படி? ஒஸ்தி படத்தை பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட ஒத்துழைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சிப்பேன்.  தடைகளையெல்லாம் தகர்த்தெறியும் தைரியசாலி முதல்வர் ஜெயலலிதா. திரையுலகிலிருந்து அரசியல் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் நீங்கள், கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு சென்று கொடியை ஏற்றியவர் நீங்கள், அப்படியிருக்க கலையுலகத்தின் கஷ்டங்களைப் பார்த்து உங்கள் கண்கள் திறக்காமல் இருக்குமா? கதறலைதான் உங்கள் காதுகள் கேட்காமல் போகுமா? ஒரு பக்கம் சின்னத்திரைகளின் வளர்ச்சி, மறுபக்கம் திருட்டு வீடியோவால் தளர்ச்சி, இன்னொரு பக்கம் திரைப்படங்களுக்கு மாநகரங்களில் 30 சதவீதம் வரை கேளிக்கை வரி என்ற அதிர்ச்சி, கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால் கன்னடப் படங்களுக்கு முழு வரி விலக்கு. வாடும் எங்களுக்கு காட்டுங்கள் ஒரு வழி, பிரச்சினைகளால் பிதுங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் விழி. யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். நடித்து குறள் டி.வி. மூலம் வெளியாகவிருக்கும் ஒஸ்தி (யு தணிக்கை சான்றிதழ்) படத்துக்கும் ஏன் கிடைக்கக் கூடாது வரிவிலக்கு? உங்களிடத்தில் இந்த கோரிக்கை வைப்பதற்கு எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன் உரிமை. சன் டி.வி. படத்தை வாங்கி விநியோகம் செய்கின்ற படங்களை சில திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் தடை போடுவோம் என சொன்னார்கள். அதில்கூட இருந்திருக்கலாம் நியாயம். சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை கூட கொடுத்தால் கூட தடை போடுவோம் என்பதை முன்கூட்டியே முறைப்படி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அறிவிக்கவில்லை. நான் உறுப்பினராக இருக்கும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் அறிவிக்கவில்லை. வெளிப்படையாக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தவில்லை. அப்படியிருந்தும் எங்கள் ஒஸ்தி படம் தணிக்கை செய்யப்பட்டு தேதியும் நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து விளம்பரம் செய்த நிலையில் இப்போது தடை என்றால் ஒரு தயாரிப்பாளரின் நிலையையும், ஒரு விநியோகஸ்தரின் கதியையும் எண்ணிப் பாருங்கள். 

திரைப்பட உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு கடன் பாக்கி என்றால் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்படி காவல் துறையிடம்கூட முறையிட்டு சிலர் பலன் பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்க, இனிமேல் சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை கொடுக்கும் படங்களுக்கு எதிர்காலத்தில் தடை போடுவோம் என்று சொல்லுங்கள். இப்பொழுது இந்தப் படத்துக்கு நிதி உதவியளித்த ரிலையன்ஸ் நிறுவனம் சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை விற்றிருக்கிறது. திரையரங்க உரிமையாளரோடு சன் டி.வி.க்கு பிரச்சினை என்றவுடன் சன் டி.வி.யை தீர்வு காணுங்கள். இல்லையேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடும் என்றுகூட அறிவித்திருக்கிறது. அதுவும்கூட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. அதையும் மீறி சன் டி.வி.யோடு திரையரங்க உரிமையாளர் சங்கம் போட்டுக் கொண்டிருக்கிறது குஸ்தி. அதில் இடையில் மாட்டி சிக்கித் தவிக்கலாமா ஒஸ்தி? 

விளம்பர செலவோடு சேர்த்து பல கோடிகளுக்கும் மேல் விலை கொடுத்து வாங்கியிருக்கும் குறள் டி.வி.யின் நிலை என்ன? இந்த நாட்டிலே தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. விநியோகஸ்தர் சங்கம் இருக்கிறது. திரைப்பட உரிமையாளர் சங்கம் இருக்கிறது. பத்தும் பத்தாததற்கு போட்டி சங்கங்களும் இருக்கிறது. எல்லாம் இருந்தும் நாங்கள் எங்கே போய் கேட்க முடியும் நியாயம்? இத்தனை கோடி செலவு செய்த தயாரிப்பாளரும், பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கிய விநியோகஸ்தருமாகிய நாங்கள்தான் பட்டிருக்கிறோம் காயம். 

உலகிலேயே ஒசத்தி ஒரே சக்தி அது ஓம் சக்தி. வெளியிடுவதற்கு அவர் தருகிறார் யுக்தி. அந்த ஆண்டவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட வேண்டும். இந்த படம் வெளியாகவிருக்கும் எட்டாம் தேதி திருவண்ணாமலை தீபம். அந்த அண்ணாமலையாரின் அருள் இருக்கும் வரை ஒஸ்திக்கு கிடைக்கும் உச்ச லாபம். இது ஒரு ஆன்மீகவாதியாகிய என்னுடைய நம்பிக்கை. 

ஆண்டவன் தான் திறக்க வேண்டும் நடை, முதல்வர் ஜெயலலிதாதான் சொல்ல வேண்டும் நல்ல விடை, அதையும் மீறி யார் போடுவார்கள் தடை. 

இவ்வாறு டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony