முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரியில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.29 - தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை ஓராண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை மேலும்  ஓராண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது.  அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேற்பகுதியில் 2012 என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது. குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை  குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.  எனவே, குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நபர்களை நீக்கல், எரிவாயு உருளை விவரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் குடும்ப அட்டை தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து  இந்த விவரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி ஜனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது.

எனவே , குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை அங்காடிக்கு குடும்ப அட்டையை பொருள்கள் வாங்குவதற்கு மற்றும் புதுப்பிக்கச் செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது.   அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012 ஆம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் இட/ இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு கையொப்பம் இட்டால் அல்லது கைரேகை பதித்தால் தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை நியாயவிலை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும் போது குடும்ப அட்டைதாரர்கள், தாங்களே முன் வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்