முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்டை பூச்சியை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சுவாரசியமான தகவல்கள்

புதன்கிழமை, 1 ஜூன் 2022      பிரத்யேகமான      விலங்குகள்
thumb-5

ஒரு காட்டைப் பராமரிக்க யானை, புலி போன்ற பேருயிர்களின் பங்கு மிக முக்கியம். அதுபோல அந்தக் காட்டுக்கு வருபவர்களை மிரட்டும் அட்டை பூச்சிகளை காட்டின் அரண் என்றுகூடச் சொல்லலாம். பொதுவாக அட்டைகள், அவற்றைக் கடந்து செல்லும் உயிரினத்தின் உடல் சூடு அல்லது வியர்வையை உணர்ந்து நெருங்கிவந்து ஒட்டிக்கொள்ளும்.

மழைக்காடுகளில் வெகு சாதாரணமாகக் காணப்படும் இந்த அட்டைகள் அவ்வளவு ஆபத்து இல்லையென்றாலும் பலராலும் ஒருவித பயத்தோடேதான் பார்க்கப்படுகின்றன. புலி, யானை போன்றவற்றுக்கு அச்சப்படுகிறார்களோ இல்லையோ நிச்சயமாக அட்டைகளுக்கு அஞ்சாமல் இருக்கமுடியாது. ஓர் அட்டை நம் உடலில் ஒட்டிக்கொண்டால் சுமார் இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை நம் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்.

ஆனால், அதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவை அப்படியொன்றும் அளவுக்கு அதிகமாக ரத்தத்தைக் குடித்து ரத்த வங்கி தேடிச் செல்லும் அளவுக்கு நம்மை வைக்காது. நமக்குச் சூடு வெகுவாகத் தெரியாத தொலைவில் வைத்து நெருப்பு மூட்டினால் சூடு தாங்காமல் மடிந்து விழும். ஆனால் அட்டைகளைச் சூடேற்றுவதும் கைகளாலேயே பிடுங்கி எறிவதும் கூடாது. அப்படிச் செய்தால், அவை அதுவரை குடித்துக் கொண்டிருந்த ரத்தத்தை அப்படியே துப்பிவிட்டு இறந்து கீழே விழுமாம்.

அவற்றின் எச்சில் கலந்த ரத்தம் மீண்டும் நம் உடலிலேயே சேர்ந்தால் அது தொற்றுகளுக்கு வழி வகுக்கலாம். அவற்றைப் பிரித்தெடுக்கையில் அப்படி நடக்காமல் இருக்க உப்புதான் சிறந்த தீர்வு அல்லது மூக்குப்பொடியைத் தூவலாம். அட்டைகளின் மீது உப்பு தூவினால் உடலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக, அங்கிருந்து போனால் போதுமென்று அதை நகர வைக்கும். அதனால், நம் ரத்தத்தைக் குடிப்பதை நிறுத்தித் தாமாக வாயை எடுத்துக்கொண்டு சுருண்டு கீழே விழுந்துவிடும். சில சமயங்களில் எரிச்சல் தாங்காமல் உயிரிழக்கவும் செய்யும்.

அட்டைப்பூச்சி நீரினுள் வாழும் உயிரினம் ஈரமான சேறு நிறைந்த பகுதிகளில் வாழும். நீரில் வாழும் அட்டை பூச்சி ஒரு அங்குல நீளம் கால் அங்குலம் அகலம் தோற்றத்துடன் இருக்கும். இளநீர் பச்சை கருப்பு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இது நம்முடைய நகக் கண்களுக்குள் ஊடுருவ முடியும். தோல் பகுதியில் கவ்விப் பிடித்துக்கொண்டு நமது குருதியை உறிஞ்சும். அதன் தோற்றம் சிறிய பலூன் வடிவத்துக்கு மாறும்.தேயிலை தோட்டங்கள் , ஏலக்காய் தோட்டங்கள் , காப்பி தோட்டங்கள் உள்ள பகுதியில் மண்புழு போன்ற அளவில் மெரூன் கலரில் அட்டைப் பூச்சிகள் இருக்கும்

இது நமது கால் பகுதியில் துளையிட்டு உள்நுழைந்து ரத்த நாளங்களை சேதப்படுத்தும் ஆகையால்தான் காபி தோட்டங்களில் தேயிலை தோட்டங்களில் முட்டிவரை பூட் காலணிகள் அணிந்திருப்பார்கள் இந்த அட்டை பூச்சி பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு.

அட்டை குளம் குட்டை ஆறு முதலிய நன்னீர் நிலைகளிலும், கடலிலும், ஈரத்தரை மீதும் வாழும் ஒருவகைப் புழு. அன்னெலிடா (Annelida) என்னும் வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அட்டையில் பல சாதிகளுண்டு. அவை பலவகையான வாழ்க்கை முறையுள்ளவை. சில அட்டைகள் மண்புழு, பூச்சிகளின் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்கின்றன. அசுத்தங்களை உண்டு துப்புரவாளர்கள் போல அவற்றைச் சில நீக்குகின்றன. பெரும்பாலான வகைகள் மற்றப் பிராணிகளின் உடம்பில் எப்போதும் அல்லது சிற்சில சமயங்களில் ஒட்டிக் கொண்டு அவற்றின் உடலிலுள்ள இரத்தத்தையோ சாற்றையோ உறிஞ்சி ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அட்டை நீரில் நன்றாக நீந்தும்.

அட்டைகளில் கருப்பு, சிவப்பு, கரும்பச்சை, பழுப்பு எனப் பலவகை நிறங்கள் உண்டு. நீரில் வாழும் அட்டைகள் நத்தைகள், புழு, பூச்சிகளை உண்கின்றன. மற்றவை மனிதர்கள், பிராணிகளின் உடலில் ஒட்டிக் கொண்டு அவற்றின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன.

இவை தட்டையான உடலமைப்பையும் மென்மைத்தன்மையையும் கொண்டவைகளாகும். நன்கு சுருங்கி விரியும் இயல்புடையவை. இவை சுமார் 45 செ.மீ. நீளம்வரை வளரும். இவற்றின் உடல் அமைப்பு மண் புழுவில் காணப்படுவதுபோல் வளையங்களாக 34 மடிப்புக்களைக் கொண்டிருக்கும். இதன் உடலில் காணப்படும் வழவழப்பான தோல் மூச்சுயிர்ப்புக்குப் பெரிதும் உதவுகிறது.

அட்டையின் வாய்ப்பகுதியில் உறிஞ்சி உள்ளது. அதில் மூன்று வகையான தகடுகள் போன்ற தாடைகள் உண்டு. இவற்றின் விளிம்பில் கூர்மையான பற்கள் உண்டு. நன்கு உடலில் ஒட்டிக்கொண்ட அட்டை தன் தாடையால் முக்கோண வடிவில் காயம் ஏற்படுத்துகிறது. அதன் வழியாக இரத்தத்தை உறிஞ்சுகிறது. உறிஞ்சுமுன் அட்டை தன் உமிழ்நீரை இரத்தத்துடன் கலக்கிறது. இதில் உள்ள 'ஹிருடின்எனும் சத்து இரத்தத்தை உறையவிடாமல் காக்கிறது. அதன் மூலம் தொடர்ந்து இரத்தம் வெளிப்பட உதவுகிறது. உறிஞ்சும் இரத்தத்தை உணவுப் பைகளில் சேமித்துக் கொள்கிறது. ஒருமுறை முழுமையாக இரத்தம் குடித்த அட்டை ஓராண்டுக் காலம்வரை உயிர் வாழ முடியும். நீரில் இறங்கும் கால்நடைகள் மனிதர்களின் மூக்கு வழியாகவும் உடலுக்குள் சென்றுவிடும். இதனால் பெருந்துன்பமும் இறப்பும் கூட ஏற்படலாம். ஒருவகை அட்டை மருத்துவ நோக்கத்திற்காக நோயாளிகளின் உடலில் உள்ள தீய இரத்தத்தை உறிஞ்சி எடுக்க மருத்துவர்களால் பயன்படுத்தப்படுவதுமுண்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்