பாராளுமன்ற தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கும் போர் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2019      அரசியல்
anbumani 2019 04 04

வேலூர், பாராளுமன்ற தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கும் போர். பணத்தை அள்ளி வீசுவார்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார் 
  
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்ய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எதிரணி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை பற்றி உங்களுக்கு தெரியும். இந்த தொகுதியில் 10 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை. இந்த பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாலாறு பிரச்சினைகளை தீர்க்க எங்களிடம் மெகா திட்டம் உள்ளது. அதனை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் இவற்றை நிறைவேற்றினால் ஆண்டு முழுவதும் பாலாற்றில் தண்ணீர் ஓடும். அதன்மூலம் குடிநீர் பிரச்சினை தீரும். விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனை எதிரணி வேட்பாளரால் செய்ய முடியாது. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும். பெட்டி, பெட்டியாக பணம் துரைமுருகனிடம் உள்ளது. அதனால் அவர் தி.மு.க. பொருளாளராக உள்ளார். தி.மு.க. பக்கம் பணம் கொடுக்கும் திட்டம் தான் உள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டம் அவர்களிடம் இல்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய்தான் கூறுகிறார். தோற்கப்போகிறோம் என தெரிந்து விட்டதால் அவர் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். அவர் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் என்னையும் கொச்சையாகவும், அவதூறாகவும் பேசி உள்ளார். நாங்கள் வன்னியர் சொத்துகளை அபகரித்து விட்டோம் என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. உள்பட எந்த விசாரணைக்கும் நானும், எங்கள் குடும்பத்தாரும் தயார். ஒரு சதுரஅடி இடத்தை கூட நாங்கள் அபகரித்து விட்டோம் என்று ஸ்டாலினால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால் நீங்கள் உங்கள் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?. அதனை உங்கள் கட்சியினரே விரும்புகிறார்கள். ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ‘நீட்’ தேர்வை கொண்டு வந்ததே காங்கிரசும், தி.மு.க.வும் தான். ராகுல்காந்தி ‘நீட்’ தேர்வு நடைமுறையில் இருக்கும். அதனை எதிர்க்கும் மாநிலங்களில் மட்டும் ரத்து செய்யப்படும் என்று கூறுகிறார். அவர்கள் கூட்டணியிலேயே முரண்பாடு. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க.தான். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தி.மு.க. மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு காரணமே தி.மு.க.தான்.

உதயநிதி ஸ்டாலின் தருமபுரியில் பேசும்போது அன்புமணி தவிர வேறு வேட்பாளர்கள் இல்லையா? என்று கேட்டுள்ளார். தி.மு.க.வில் உங்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இல்லையா?, வேறு யாருக்கும் பொறுப்பு கொடுக்க மாட்டீர்களா?. அப்படி பார்த்தால் துரைமுருகன் தான் சீனியர். அவருக்கு தான் தி.மு.க. தலைவர் பதவி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கழித்து இப்போது தான் அவருக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து