காஞ்சீபுரம் : ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் நடைபெறும் என்று அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறை நிர்வாகம் விரைவு தரிசனத்திற்காக அறிமுகப்படுத்திய 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட்டில் மாற்றத்தை செய்துள்ளது. மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை அத்திவரதரை விரைவாக தரிசிக்க முதலில் 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன் 1000 பேராக உயர்த்தப்பட்டு தற்போது ஒரு நாளைக்கு 2000 பேர் விரைவு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறநிலையத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு 2 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் தரிசனம் செய்யலாம் என்றும் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வரும் ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரை நின்ற கோலத்தில் தரிசனம் நடைபெறும் என்றும், 18-ம் தேதி அதிகாலையில் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.