தொடர் மழை: திருப்பதியில் பக்தர்கள் கடும் அவதி

புதன்கிழமை, 6 ஜனவரி 2021      ஆன்மிகம்
Tirumala 2021 01 06

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் திருப்பதியில் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  திருப்பதியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் குளிருடன் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருப்பதியில் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் கடும் குளிருக்கு உள்ளாகி கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.  நிவர் புயல் காரணமாக ஏற்கனவே திருமலையில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருப்பதி மலையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீரில் பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பாபவிநாசம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.  தற்போது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாபவிநாசம் செல்லும் மலைப்பாதை பக்தர்களின் பயன்பாட்டுக்காக நேற்று முன்தினம் முதல் திறந்து விடப்பட்டுள்ளது.  இதனால் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாபவிநாசம் சென்று நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் திருப்பதியில் 37 ஆயிரத்து 64 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 13 ஆயிரத்து 425 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.90 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து