முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலிருந்து வருவோருக்கு நாளை முதல் தடை: குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் விலக்களிக்க அமெரிக்கா முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, இங்கிருந்து வரும் மக்கள் நாளை  4-ம் தேதி முதல் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தடையிலிருந்து மாணவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், சில தனிநபர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு நாளை 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதேபோன்று பிரேசில், சீனா, ஈரான், தென் ஆப்பிரிக்காவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும், சில பிரிவினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இந்தியாவிலிருந்து வருவோருக்குப் பல்வேறு நாடுகளும் தடை விதிக்கத் தொடங்கியுள்ளன.

இதனால், அமெரிக்க அரசும் தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தியது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் அறிவுரைப்படி நாளை 4-ம் தேதி முதல் அமெரிக்கர்கள் அல்லாத, அமெரிக்காவில் குடியிருக்காதவர்கள் இந்தியாவிலிருந்து வருவதற்குத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சர் டோனி பிலின்கின் வெளியிட்ட அறிவிப்பில், 

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருக்கிறது, பல்வேறு உருமாறிய வைரஸ்களும் இருக்கின்றன. இதனால், அமெரிக்கர்கள் அல்லாத, அமெரிக்காவில் குடியிருக்காதவர்கள் இந்தியாவிலிருந்து வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதில் மாணவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், சில தனிநபர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவுக்கு விசாவுக்காக விண்ணப்பம் செய்பவர்கள், இணையதளத்தையும், அருகே இருக்கும் தூதரகத்தையும் தொடர்பு கொண்டு அவ்வப்போது விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதுவரை விசா வழங்குவது கட்டுப்படுத்தப்படும். அதேசமயம், தகுதியான எப்-1 மற்றும் எம்-1 விசா வைத்திருக்கும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அவர்களின் படிப்பைத் தொடரலாம். தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியதில்லை.

ஆனால், தங்களின் கல்வியாண்டு தொடங்க 30 நாட்களுக்கு முன்பே அமெரிக்காவுக்குள் மாணவர்கள் வந்துவிட வேண்டும். கல்விக்கான விசா கோரும் மாணவர்கள் கண்டிப்பாக அருகே இருக்கும் தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும் அல்லது இணையதளத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து