இந்தியாவில் நேற்று ஒரேநாளில் முதல் முறையாக 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி பிறந்தநாளில் சாதனை

Corona-vaccine-2021-09-02

மோடி பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மதியம் 1.30 மணி நிலவரப்படி ஒரு சில மணிநேரங்களில் 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. பின்னர் நேற்று ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து, மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட மத்திய அரசு திட்டமிட்டது. நேற்று 1.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும் 1.50 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியதில்லை, அதை அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடிக்கு பிறந்தநாள். அவருக்கு மிகச்சிறந்த பரிசாக அமையும் வகையில் தடுப்பூசி செலுத்தாத உங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துங்கள்.

இதுதான் பிரதமர் மோடிக்கு சிறந்த பரிசாக அமையும்” எனத் தெரிவித்து இருந்தார்.

அதற்கான துரித பணிகளில் மத்திய அரசு இறங்கியது. இந்த நிலையில், நாடு முழுவதும் மதியம் 1.30 மணி நிலவரப்படி ஒரு சில மணிநேரங்களில் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில், மாலை 5 மணிக்கு வெளியான நிலவரத்தின்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி 1.30 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே ஒரு நாள் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னதாக இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 77.24 கோடியைக் கடந்து இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 63,97,972 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்டத் தகவலின்படி, மொத்தம் 77,78,319 முகாம்களில் 77,24,25,744 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து