முக்கிய செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க மீது அ.தி.மு.க குற்றச்சாட்டு

புதன்கிழமை, 13 அக்டோபர் 2021      அரசியல்
EPS-OPS 2021 07 23

Source: provided

சென்னை : தமிழகத்தில் கடந்த அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் என்னும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பல பகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதிகமான இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில்,உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்,இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய தேர்தல் வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது. அண்ணாவின் இதயக் கனி புரட்சித் தலைவர் கண்டெடுத்த ஈரிலைக் கழகமாம் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஈரிலை வெற்றிச் சின்னத்தை கை வைத்து மறைத்துவிடலாம் என்று எண்ணி இது போன்ற ஜனநாயக விரோதப் போக்கை தி.மு.க. நடத்தி முடித்திருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்பு வெளியான உடனே, கழகம் இது ஜனநாயக விரோதப் போக்கான அறிவிப்பாக இருக்கிறது. கழகம் ஆட்சிக் கட்டிலிலே இருந்தபோது இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறது.

ஆனால், 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க. அரசு இரண்டு கட்டங்களாக நடத்த முயல்கிறது. இதில் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தால் நியாயமான முறையிலே நடைபெறுவதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சொல்லி கழகம் சென்னை உயர்நீதிமன்றத்திலே W.P. 20671/2021 (Election) All India Anna Dravida Munnetra Kazhagam - Vs - Tamil Nadu State Election & 2 Others என்ற வழக்கை 1.10.2021 அன்று தொடுத்தது. அந்த வழத்தில் தேர்தலை ஒரே கட்ட மாக நடக்கி முடிக்க வேண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வட்டத்திற்கும், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தனித்தனியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடிகள் மூன்றடுக்கு பாதுகாப்போடு பாதுகாக்கப்பட வேண்டும். வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படக்கூடிய அறையை கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் பல செய்திருந்தோம்.

தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான தமிழக தலைமை வழக்கறிஞர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன கோரிக்கைகளும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நீதிமன்றத்தில் அனைத்துக் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தலை நாங்கள் நடத்துவோம் என்று தமிழக தேர்தல் ஆணையமும் உத்தரவாதம் அளித்திருந்தது.

ஆனால், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. அரசு, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்தபோதிலும் அதை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வன்முறைக் களியாட்டங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் தி.மு.க. அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் நடத்தியிருக்கக்கூடிய தேர்தல் விதிமீறல்களையும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளையும் பட்டியலிட்டால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது. குறிப்பாக சிலவற்றை, பொது நலன் விரும்பும், தமிழகத்தில் அமைதியை நாடும், என்றென்றும் நல்லாட்சியை விரும்பும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.

நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற சட்ட விதிமீறல்களையும், ஜனநாயக படுகொலையையும் முன்கூட்டியே அறிந்த கழகம் கடந்த 7.10.2021 அன்று தேர்தல் ஆணையத்திடம், விரிவாகவும், தெளிவாகவும், வாக்கு எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தக்கூடாது. வெற்றி பெற்றவர்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஆளும் தி.மு.க-வின் நிர்வாகிகளை வாக்கும் எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என்பனவற்றை வலியுறுத்தி மனு கொடுத்திருந்தோம். ஆனால், நீங்கள் என்ன சொல்வது, நாங்கள் என்ன கேட்பது என்பதை போல நம்முடைய கோரிக்கைகளுக்கு நேரெதிராக ஆளும் தி.மு.க. அரசும், தேர்தல் ஆணையமும் ஒன்றாக கரம் கோர்த்து வாக்காளர்களை துச்சமென மதித்து செயல்பட்டிருக்கிறது.

வாக்குப் பதிவு நாளன்று பல இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கழகத்தின் சார்பிலே தேர்தல் ஆணையத்தில் 9.10.2021 அன்று மனு கொடுத்தோம். அதன் மீதும் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கத் தவறியிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்பட்ட அறையில் கண்காணிப்புக் கேமராக்கள் பல இடங்களிலே பழுதடைந்து இருக்கிறது. இது மிகப் பெரிய ஐயத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் நாளன்று காலை முதலே பல்வேறு அராஜக நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் ஆங்காங்கே நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆளும் தி.மு.க. அரசிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் குறிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகுதான் தொடங்கி இருக்கிறது. அதற்கான உத்தரவைப் பெற யாருக்காக காத்திருந்தார்கள் என்பது தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் தெரியும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முகவர்கள் பல இடங்களிலே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயகத்தின் 4-ஆவது தூணான பத்திரிகையாளர்களே பல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஊடகத் துறையினராலும், பத்திரிகைத் துறையினராலும் நடந்து முடிந்தது.

தி.மு.க-விற்கு எங்களுடைய ஓட்டு எந்தக் காலத்திலும் இல்லை. அவர்கள் எங்களுடைய வாக்குகளை அவர்களாகவே பதிவு செய்து அதிகாரிகளைக் கையிலெடுத்து தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கி வெற்றி பெற்றாலும் எங்களுடைய உளப்பூர்வமான அண்ணாவின் இதயக்கனி பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்டெடுத்த ஈரிலைக் கழகமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் என்று உறுதிபூண்டு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்",என்று தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து