முக்கிய செய்திகள்

மக்களை காக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு வங்கிகளும் உதவ வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      தமிழகம்
CM-4 2021 10 25

Source: provided

சென்னை : மக்களை காக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு வங்கிகளும் உதவ வேண்டும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.,

தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவில் இருந்து வென்று வரும் இக்காலக்கட்டத்தில் உங்களது பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும்.

இப்போது மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கியமான துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும்; பொருளாதாரம் புத்துயிர் பெறவும்; தொற்றுநோய்களின் போது பல குடும்பங்கள் அனுபவித்த வருமான இழப்பை மாற்றவும் வேண்டிய ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே அரசும் வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என்பதால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஜிடிபியுடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசு பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்துப் பின்னடைவுகள் என்று பட்டியலிட்டால் அது மிக மிக நீளமானது. ஆனால் அதே நேரத்தில் அது பல நன்மைகளை மறைமுகமாகச் செய்துள்ளது. நம்மை யார் என்று நமக்கே காட்டி இருக்கிறது. கொரோனா என்ற உலகளாவிய பெருந்தீமையை வெல்லும் ஆற்றல் உள்ளவர்கள் நாம் என்பதை நமக்கே காட்டி உள்ளது. ஒரு சில மாதங்களில் நமது மாநிலத்தின் மருத்துவ உள்கட்டமைப்பை நாம் சீர் செய்தோம். 

மாநில விற்பனை வரியைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. பல்வேறு நிதிச் சுமைக்கு இடையில்தான் இதனை வழங்கினோம். இதற்கு ஒரே காரணம், மக்களைக் காக்கவேண்டும் என்ற அரசின் நோக்கம்தான். நேற்றும், இன்றும், நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஏழை எளிய மக்கள், விளிம்புநிலை மக்களின் உயர்வுக்கு வங்கிகள் உழைக்க வேண்டும். வங்கிச் சேவைகள் அவர்களுக்குப் பயன்பட வேண்டும். தமிழக அரசால் வகுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசாங்கம் திட்டமிடுகிறது. மக்களுக்கு ஓரளவு நிதி உதவி செய்கிறது. கூடுதல் நிதியை அந்த மக்கள் வங்கிகள் மூலமாகப் பெறுகிறார்கள். அந்தத் தேவையை வங்கிகள் பூர்த்தி செய்தாக வேண்டும்.

கடன்களை சும்மா தருவது இல்லை. சும்மாவும் தர முடியாது. தகுதியானவர்களுக்கு கடன்களைக் கொடுப்பதன் மூலமாக வங்கியும் வளரும், மக்களும் வளர்வார்கள். இந்தப் பரஸ்பர நிதி நட்பானது நிலைத்து நீடிப்பது என்பது மாநிலத்தின் நிதி வளர்ச்சிக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்.

 தமிழ்நாடு அரசு வங்கிக் கடன் அடிப்படையில் மூன்று சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 1,37,429 விண்ணப்பங்களில், இதுவரை 35.67 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

மாணவர்களுக்கான கல்விக் கடனையும் தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது. மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது. அந்தக் கல்வியை அடையப் பணம் தடையாக இருக்கக் கூடாது. எனவே கல்விக் கடன்களை வழங்குவதன் மூலம் இந்த நோக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இங்குள்ள அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகள் மாநிலத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அத்தகைய விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது, ஏன் உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து