முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ. 1,25,244 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து - 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
CM-2 2022 07 04

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்நாடு என்ற  முதலீட்டாளர்கள் மாநாட்டில்  1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.  மேலும் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை முதல்வர் தொடங்கி வைத்தார்.  22,252 கோடி ரூபாய் முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழக அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது. அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31ஆம் நிதியாண்டிற்குள் தமிழகத்தினை ஒரு  டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 

டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் துவக்கம்:  

மாநிலத்தில் நிதித் தொழில் நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ் (TNTecxperience) திட்டத்தை முதல்வர்  தொடங்கி வைத்தார்.  இத்திட்டம் மூலம் தனிநபர்கள் / புத்தொழில் நிறுவனங்கள் / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம். மேலும், டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் திட்டத்திற்கான இணையதளத்தையும் (https://tntecxperience.com) முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில் நுட்ப முதலீட்டுக் களவிழா – TN PitchFest – தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.  வழிகாட்டி நிறுவனமும், Startup TN நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன. இந்த நிகழ்விற்கான விவரங்களை https://tntecxperience.com/users/tnpitchfest என்ற  இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.  

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த நிகழ்வில், 11 நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன. 

மேலும் நிதி தொழில் நுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்புச் சலுகை வழங்குவதற்கு நிதி நுட்ப ஆட்சிமன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட  2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்புச் சலுகை அளிப்பதற்கான ஆணைகளை முதல்வர் அந்நிறுவனங்களுக்கு வழங்கினார்.  

மேலும் 65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.  59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு  மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

அதை தொடர்ந்து 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.   

மேலும் 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, தமிழக முதல்வர், உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ வெளியிட்டார். அதை தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-யையும் முதல்வர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்  தங்கம் தென்னரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, டாடா பவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்  பிரவீன் சின்ஹா, ஆக்மே குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மனோஜ்குமார் உபாத்யாய், இயக்குநர் சசி சேகர், கூபிக் பிவி நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் பீட்டர் வான் மீர்லோ, அயல் நாட்டுத் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் / கூட்டமைப்புகளின் பிரதிநிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து