முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி டி-20 போட்டி: மே.இ.தீவுகள் வெற்றி

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
West-Indies 2022-08-15

Source: provided

வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. பிலிப்ஸ் அதிகபட்சமாக 26 பந்தில் 41 ரன்னும் ( 4 பவுண்டரி , 2 சிக்சர் ), கேப்டன் வில்லியம்சன் 24 ரன்னும் ( 2 பவுண்டரி ) எடுத்தனர். ஓடியன் சுமித் 3 விக்கெட்டும் , அகீல் ஹூசைன் 2 விக்கெட்டும் , டொமினிக் டிரேக்ஸ், ஹைடன் வால்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 146 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புரூக்ஸ் 56 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), பிரண்டன் கிங் 35 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி , 3 சிக்சர்) போவெல் 15 பந்தில் 27 (2 பவுண்டரி , 2 சிக்சர் எடுத்தனர். முதல் 2 போட்டியிலும் தோற்று தொடரை இழந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது ஆறுதல் வெற்றியாகும். 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந்தேதி பிரிட்ஜ் டவுனில் நடக்கிறது.

___________

ஜடேஜாவால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியாது - ஆகாஷ் சோப்ரா

ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா, யுசுவேந்திர சாஹல், ரவிபிஷ்னோய் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டியின் அடிப்படையில் தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும். இந்த நிலையில் உலக கோப்பையில் ஜடேஜாவால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம் பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக கோப்பைக்கு பிறகு அவர் விளையாடிய 7 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 43-க்கு மேல் உள்ளது. ஒரு ஓவருக்கான ரன்னும் அதிகமாக இருக்கிறது. அவர் மட்டுமின்றி அக்‌ஷர் படேல், அஸ்வினும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலர்களாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

___________

ராஸ் டெய்லருக்கு ஷேவாக் கூறிய பேட்டிங் அறிவுரை

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், தான் கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை 'பிளாக் அண்ட் ஒயிட்' என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:2 012-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடினேன். ஒரு நாள் இரவு டெல்லியில் உள்ள ஷேவாக்கின் ஓட்டலுக்கு சென்றோம். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அங்குள்ள மெகா திரையில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் இறுதி சுற்றை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த ஓட்டலில் உணவு மிக அருமையாக இருந்தது, அதிலும் இறால் உணவு தனிச்சுவை. நான் அவற்றை வெளுத்து கட்டினேன்.

மறுநாள் களம் இறங்கிய போது ஷேவாக் மைதானத்தில் நாலாபுறமும் பந்தை விரட்டியடித்து ரன் குவித்தார். நானோ நெருக்கடியில் தடுமாறினேன். என்னை அதிக தொகைக்கு எடுத்திருந்ததால், அதற்கு ஏற்ப விளையாட வேண்டி இருந்தது. இதனால் பேட்டிங்கின் போது பதற்றத்திற்கு உள்ளானேன். ஆனால் ஷேவாக்கோ ரொம்ப ரிலாக்சாக ஆடினார். அருகில் வந்த அவர், 'ராஸ்....நீங்கள் இறாலை எப்படி ரசித்து ருசித்து சாப்பிட்டீர்களோ அதே போன்று கிரிக்கெட் விளையாட வேண்டும். கிரிக்கெட் குதூகலம் அளிக்கும் விளையாட்டு. ஜாலியாக ஆட வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார் என்று தெரிவித்துள்ளார்.

___________

சென்னையில் செப்.12 முதல் மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னையில் 1997 முதல் ஆடவர் பங்கேற்கும் சர்வதேச ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த போட்டி பின்னர் மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மகளிர் பங்கேற்கும் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். 

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு, பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்தது. தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்வர் ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது. நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள போட்டிகளை சோனி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து