முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் சீற்றத்தால் எழுந்த ராட்சத அலைகள்: தமிழக கடலோர கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது : நிவாரண முகாம்களில் மீனவ குடும்பங்கள் தங்க வைப்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
Mantus-Storm 2022 12 -09

Source: provided

சென்னை : மாண்டஸ் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் ராட்சத அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பி வருகின்றன. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.  

புயல் காரணமாக, மாமல்லபுரம், கல்பாக்கம் உள்பட பல்வேறு மீனவ குப்பம் பகுதிகளில் நேற்று 2வது நாளாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கரையை நோக்கி பெரும் சீற்றத்துடன் அலைகள் வேகமாக வந்து மோதின. 10 அடி உயரத்துக்கு அலை எழுந்ததால் காலையில் நடைபயிற்சிக்கு சென்ற உள்ளூர் மக்களை போலீசார், தீயணைப்பு படையினர் திருப்பி அனுப்பினர்.  இதே போல் வெண்புருஷம் குப்பம், கொக்கிலமேடு குப்பம், தேவனேரி, சாலவான்குப்பம், புதுஎடையூர் குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு குப்பம், புதிய கல்பாக்கம் குப்பம், நெம்மேலி குப்பம், திருவிடந்தை, செம்மஞ்சேரி குப்பம் வரை கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கரையை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.  நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலையோரம் இருந்த பெரிய காட்டுவா மரம் பலத்த சூறைக்காற்றினால் முறிந்து விழுந்தது. உடனே அவற்றை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். 

மாண்டஸ் புயல் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த தரைக்காற்று வீசியது. 10 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்ததால் பழவேற்காடு-காட்டுப்பள்ளி தரைமட்ட சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். காட்டுப்பள்ளி, காலாஞ்சி, பழவேற்காடு உள்பட கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களை நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார். 

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். புயல் காரணமாக காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கட்டி வைத்துள்ளனர். சிறிய படகுகளை கிரேன் மூலம் கரைக்கு தூக்கி பாதுகாப்பாக  வைத்துள்ளனர். புயல் காரணமாக காசிமேட்டில் 10 அடி உயரத்துக்கு கடல் சீற்றம் காணப்பட்டது. அதனால் கடற்கரைக்கு யாரும் செல்லக்கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.  

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று காலையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடற்கரை மணல் பகுதியை தாண்டி வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளானார்கள். 

பட்டினப்பாக்கத்தில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இந்த படகுகளை மீனவர்கள் போராடி கரைக்கு கொண்டு வந்தனர். பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதே போல திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் சந்திரபாடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக எல்லைக்கும், புதுக்சேரி மாநிலம் காரைக்கால் எல்லைக்கும் நடுவே உள்ள பகுதியாகும். இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் நேற்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. 

இது குறித்து தகவல் அறிந்ததும் தாரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர். 

இதே போல், சீர்காழியை அடுத்த தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மழை நீர் வெளியேறாத நிலையில் நேற்று காலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வெளியேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை மீட்டு பாதுகாப்பாக தொடுவாய் அரசு பள்ளி மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது. இதனால் அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்த நிலையில், புதுச்சேரியின் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் மீதமிருந்த பொருட்களை மக்கள் தெருவில் எடுத்து வைத்திருந்தனர். அரசு தரப்பில் தூண்டில் வளைவு அமைக்காததால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி மக்கள் ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் அங்கு நேரில் வருவதாக உறுதி தந்ததால் போராட்டத்தை ஒத்திவைத்தனர். 

இந்தநிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து