முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடிவுக்கு வருகிறதா மோதல் போக்கு? தமிழக கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
CM-4 2023 01 26

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், இந்தாண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, குடியரசு தின விழாவையொட்டி, கவர்னரின் தேநீர் விருந்தில் முதலவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அவருடன் மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக தமிழ்நாடு அரசிற்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மோதல் நீடித்து வருகிறது. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், அரசியலமைப்புக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிட்ட பத்திகளை படிக்காமல் கவர்னர் தவிர்த்ததையடுத்து அவருக்கு எதிராக தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இதனால் கவர்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மோதலுக்கு மத்தியில் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினை கவர்னர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்தடைந்தார்.  அவரை கவர்னர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.  தமிழ்நாடு அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில் முதல்வர் கவர்னரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

முன்னதாக கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து