முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் சத்துவாச்சாரியில் சுகாதார மைய கட்டுமான பணிகள் மற்றும் காலை உணவு திட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

வேலூர்: சத்துவாச்சாரியில் சுகாதார நல மைய கட்டடத்திற்கான  கட்டுமானப் பணிகள் மற்றும் வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  1.2.2023 அன்று வேலூர் மாவட்டத்திற்கு சென்று வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை,  மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், வேலூர், சத்துவாச்சாரி, பாரதி நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதை தொடர்ந்து நேற்று தமிழக முதல்வர் வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையற் கூடத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், அங்குள்ள ஒவ்வொரு சமையல் அறைகளுக்கும், உணவு ஏற்றும் பகுதிக்கும் சென்று பார்வையிட்டதோடு, உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் உணவினை சுகாதாரமான முறையில் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர், சத்துவாச்சாரி, காந்தி நகரில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு நேரில் சென்று, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அலமேலுமங்காபுரத்தில் 132 மாணவ, மாணவியர்கள் பயிலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு முதல்வர் நேரில் சென்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பறிமாறினார்.

இந்த ஆய்வின் போது, அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி உணவு வகைகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின்போது, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து