முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      தமிழகம்
OPS 2023 01 28

Source: provided

சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கைகளை மக்கள் முன், நாம் எடுத்து சொன்னோமோ அவற்றை எல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. எதிர்வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தயார் என்றும் அறிவித்தேன். 

அதற்கேற்ப சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். அதே போல், இரட்டை இலை சின்னத்தின் மூலம் அ.தி.மு.க. போட்டியிடுகிற வாய்ப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் பொது வேட்பாளரை நிறுத்த நான் கையெழுத்திட தயார் என்று அறிவித்தேன். 

என்னை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் அல்ல, கட்சியிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பகை உணர்வோடு கூறி வந்தனர்.  இந்நிலையில் என்னையும், என்னை சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர்தான், பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது. 

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எவ்வித தடையும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் சச்சரவுக்கு உள்ளான பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொறுப்பை சுப்ரீம் கோர்ட்டும் , தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை. 

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்றுக் கொண்ட தொண்டர்களும் மற்றும் என்மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்லம் தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.  ஆனால் வேட்பாளர் செந்தில்முருகன் தற்போது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரை கட்சியின் அமைப்பு செயலாளராக நியமித்து உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து