முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் உலக அருங்காட்சியகத்தை பொதுமக்கள் நாளை முதல் பார்வையிட அரசு அனுமதி

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      தமிழகம்
DMK 2024-03-04

Source: provided

சென்னை : கலைஞர் உலக அருங்காட்சியகத்தை பொதுமக்கள் நாளை முதல் பார்வையிட அரசு அனுமதி அளித்துள்ளது.

கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் 6-3-2024 புதன்கிழமை முதல் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, 26-2-2024 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன், கலைஞரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் "கலைஞர் உலகம்" என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த, கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6-3-2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும். இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து