முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஜூலை.3 - திருச்சியில் நேற்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ வபத்தில் 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த கோர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:- திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள கீழ வண்ணாரப்பேட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் இருந்தவர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தனர். பெண்கள் உள்பட ஒரு சிலர் மட்டுமே குடிசைகளில் இருந்தனர். இந்நிலையில் நண்பகல் 11.30 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் திடீரென்று தீ பற்றியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவி ஆக்ரோசமாக கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் குடிசைகளில் இருந்தவர்கள் அய்யோ அம்மா... காப்பாற்றுங்களேன் என்று அலறியடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று நடுத்தெருவுக்கு ஓடி வந்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

விபத்து குறித்து அறிந்த திருச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவம் இடம் நோக்கி விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது குடிசைகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கின. இதனால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் தீ மேலும் வேகமாக அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கும் பரவி தீ கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் ஒருமணி நேரம் மிகுந்த சிரமத்திற்கிடையே போராடி தீயை அணைத்தனர். அரசு மருத்துவமனை போலீஸ் எஸ்.ஐ. அருண் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர தீ விபத்தில் 30 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இதில் வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, ரேஷன் கார்டு, சான்றிதழ்கள் மற்றும் பணம், நகை போன்ற அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதன் சேத மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது

இப்பகுதியில் ஒரு குடிசையில் வசித்து வந்த மதியழகன் என்பவரின் மனைவி தேவி என்பவர் சமையல் செய்து விட்டு அடுப்பை அணைக்காமல் விட்டதே  இந்த தீ விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தின் சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதி, என்.ஆர்.சிவபதி எம்.எல்.ஏ, மேயர் ஜெயா, துணை மேயர் ஆசிக் மீரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்