முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதிச்செயலை முறியடித்த அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு பரிசு

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.1 - ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி செல்லவிருந்த பாதையில் வைக்கப்பட்டிருந்த பைப் குண்டை கண்டுபிடித்து பெரும் சதிச் செயலை முறியடித்த 2 அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் பரிசு வழங்கி முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பாரத முன்னாள் துணைப் பிரதருமான எல்.கே.அத்வானி கடந்த 28.10.11 அன்று மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை மதுரையில் மேற்கொண்டபோது, அவர் செல்ல இருந்த திருமங்கலம் ராஜபாளையம் சாலையிலுள்ள ஆலம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததை அறிந்த, மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம், ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் ஆரம்பக்கால உறுப்பினர் எம்.செல்வராஜ் என்பவர், ஆலம்பட்டி ஊராட்சிக்கழக செயலாளர் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு 14-வது வார்டு கவுன்சிலருமான செல்வம் மூலம் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று, அதனை செயலிழக்கச் செய்துள்ளனர்.

ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியச் 14-வது வார்டு கவுன்சிலர் செல்வம் ஆகியோரின் சமயோசித நடவடிக்கை காரணமாக மிகப் பெரிய பேராபத்து தவிர்க்கப்பட்டு, சதிச் செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன. இவர்களது நடவடிக்கையை பாராட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று செல்வராஜ் மற்றும் செல்வம் ஆகியோரை தமது இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களுடைய சமயோசித துரித நடவடிக்கையை பாராட்டி, அவர்களுக்கு கழகத்தின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு செல்வராஜ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும், தங்களது உளப்பூர்வமான நன்றியினை ஆனந்தப் பெருக்குடன் தெரிவித்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony