முதல்வர் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்

Image Unavailable

 

சென்னை, நவ.19 - தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கின்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தமிழ்மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக்தாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் 17-ம் தேதி வானொலி உரை விலைவாசி ஏற்றம், பால், மின்சாரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்த வேண்டுகோள் மக்கள் மத்தியிலே வரவேற்பை பெறக்கூடிய வகையில் அமைந்திருந்தது. இதுவரை தமிழக வரலாற்றில் முதலமைச்சராக இருந்தவர்கள் எந்தவொரு திட்டங்களை மக்களை கலந்தாலோசித்து மக்களிடம் தெரிவித்துவிட்டு செயல்படுத்தியதில்லை. முதல் முறையாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களிடம் கோரிக்கையாக தெரிவித்துவிட்டு விலைவாசி ஏற்றத்தை அறிவித்திருக்கிறார்.

அந்த அறிவிப்பிலே கடந்து முடிந்த பொதுத்தேர்தலிலே முதலமைச்சர் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நான் விலை ஏற்றத்தை கொண்டுவர விரும்பவில்லை என்பதையும், உணர்த்தியிருக்கிறார்.

கடந்த கால தி.மு.க. ஆட்சியிலே மின்சாரதுறை 53 ஆயிரம் கோடி ரூபாய் சிக்கி தவித்திருக்கிறது. அதைபோல தமிழக அரசின் மொத்த கடன் 1 லட்சத்து 100 கோடி ரூபாய் தி.மு.க. ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகளால் சீரழிந்துப்போன தமிழகத்தின் நிதி நிலையை சரிச் செய்ய மத்திய அரசும், எந்த வித உதவியும் வழங்காத நிலையில், பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்படவைக்க தமிழக அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மொத்தில் தமிழக அரசின் இன்றைய கடன் சுமை 1 லட்சத்து 1000 கோடியை தாண்டி இருக்கிறது என்ற விளக்கமும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் ஆவின், போக்குவரத்துறை, மின்சாரத்துறை போன்றவை மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படுபவை, அத்துறைகள் எல்லாம் கடனில் மூழ்கி திவாலாகி மூடப்பட்டு விட்டால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், போக்குவரத்தும், மின்சாரமும், பெரியப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழகமே ஸ்தம்பித்து போகும், சூழ்நிலை உருவாகும் என்பதை உணர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் வருவதற்கு முன்னாள் அணை போட வேண்டும் என்ற கருத்தைச் சொல்லி சரியாக மக்கள் முன் வேண்டுகோள் வைத்திருக்கிறார். கற்றறிந்த பெருமக்கள், ஆன்றோர், சான்றோர்கள் என்று அனைவரும் புரியும் வண்ணம் வெள்ளை அறிக்கையாக இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போர்கால நடவடிக்கையாக இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழகத்தினுடைய பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் காப்பாற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பையும், தர வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பாற்ப்பட்டு இந்த வேண்டுகோளை அரசியலாக்காமல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கின்ற நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ