முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பெப்சி உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஜன.27 - தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எம்.ஜி.ஆர். சமாதி அருகே உண்ணா விரதம் இருக்க பெப்சி முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து பெப்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பெப்சியைப் பற்றி தவறான தகவலை தந்து, பெப்சியை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்குவோம் என்று கூறியதை பெப்சி வன்மையாக கண்டிக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏ.பி.சி. என்று தயாரிப்பாளர்களை பிரித்து ஊதியம் நிர்ணயித்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து, தயாரிப்பாளர்களின் ஓட்டுகளை வாங்கி, தற்போது அதை நிறைவேற்ற முடியாமல் பதவியில் இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரன், வாழ்வாதாரத்திற்கும், வயிற்றுப்பசிக்கும் போராடும் தொழிலாளத் தோழர்களை தேர்தலுக்காகவும் பதவிக்காகவும் இருக்கிறார்கள் என்று கூறிக் கொச்சைப்படுத்தி பேசி, தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள தமிழ் சினிமாவை அழிவு பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கும் அவரை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை இழுத்தடித்தது தயாரிப்பாளர்கள் சங்கமே, மேலும் தற்போது நடைபெற்றக் கொண்டிருக்கும் படப்பிடிப்புகள் அனைத்தையும் திட்டமிட்டு நிறுத்தி வருவதும் தயாரிப்பாளர்கள் சங்கம் தான். இதில் பெப்சிக்கு இம்மியளவு சம்மந்தமும் இல்லை.

பெப்சி தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டிருப்பது அடிப்படை சம்பள உயர்வு மட்டும்தான் என்பதையும், ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய சம்பளத்தையே இன்றைக்கும் வாங்க சொல்வதையே பெப்சி மறுக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் பெப்சி ஆள்குறைப்பு செய்ய முன்வந்து அதை ஒப்புக் கொண்டபின்பும் அந்த செய்தியை எஸ்.ஏ. சந்திரசேகரன் மறைப்பதை பெப்சி கண்டிக்கிறது.

அவுட்டோர் யூனிட் முதலாளிகள், தயாரிப்பாளர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எங்களின் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது போல் வெளியாட்களை வைத்து தங்களின் உபகரணங்களை எடுத்து செல்ல அனுமதித்தால், அதனை எதிர்த்து போராடுவோம்.

ஈழத்தமிழர்கள் பாதித்தபோது ராமேஸ்வரம் போக பெப்சி தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். காவேரி பிரச்சனைக்காக நெய்வேலி சென்று போராட பெப்சி தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். மொழி உணர்வு பிரச்சனைக்களுக்கும் பெப்சி தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், பெப்சி தொழிலாளர்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது மற்ற மாநிலங்களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வேலை செய்வோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இது தான் தமிழ் உணர்வா?

பெப்சியின் தொழிலாளர் அமைப்பில் இருந்துக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில், தொழிலாளர்களுக்காக நியாயம் கிடைக்க பேசிவரும் பெப்சி ஊதியக்குழுத் தலைவர் இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய இயக்குநர் சேரனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த பெப்சி தலையிடாமல் இருந்திருந்தால் இயக்குநர் சேரன் இயக்கிய அவரது முதல் திரைப்படம் ``பாரதி கண்ணம்மா'' வெளிவந்திருக்கமுடியாது. அத்திரைப்படத்தில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையை பெப்சி சுமூகமாக பேசி தீர்த்திருக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் ஹென்றி தற்போது இயக்குநராக இருந்து வரும் சேரன் மூடிமறைத்திருப்பார். சேரன் என்ற ஒரு இயக்குநரே தற்போது இருந்திருக்க மாட்டார். இப்படி இவர் வாழ்க்கைக்கு பெரிதும் உதவிய பெப்சியைப் பற்றி அவர் விமர்சித்ததை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுத்தால் அவருக்காக எந்த வித போராட்டமும் நடத்த எங்களின் 23 சங்க தொழிலாளர்களும் தயாராக உள்ளோம் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே, பெப்சி தொழிலாளர்களுக்கு இதே பிரச்சனை வந்தபோது, கிட்டத்தட்ட ஏழு தொழிலாளர்கள் தங்களின் உயிரை விட்டனர். அதே நிலை தற்போதும் எங்களின் தொழிலாளர்களுக்கு ஏற்பட நேர்ந்தால் அதற்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், சேரன் ஆகியோரே முழு பொறுப்பாளர்கள் ஆவார்கள் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த செயல்களை கண்டித்தும், எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அனைவரும், தமிழக அரசு அனுமதி பெற்று, பெப்சியை உருவாக்கிய, எங்களின் 23 சங்கங்களும் உருவாக காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!