ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டி.ஆர். எஸ்.கட்சி ஆதரவு

வியாழக்கிழமை, 4 மே 2017      அரசியல்
bjp flag(N)

ஐதராபாத், ஜனாதிபதி தேர்தலில் தேசிய பாரதிய ஜனதா தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆதரவு அளிக்கும் என்று அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜிதேந்திர ரெட்டி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த சோனியா காந்தி முயற்சி செய்து வருகிறார். அதேசமயத்தில் பாரதிய ஜனதா தலைமையில் உள்ள ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தனியாக வேட்பாளரை நிறுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தெலுங்கானா மாநிலத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி உதவி செய்தால் அந்த கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி லோக்சபை தலைவர் ஜிதேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி உதவி செய்யும்போதெல்லாம் அந்த கூட்டணிக்கு டி.ஆர்.எஸ். கட்சி ஆதரவு அளித்துள்ளது என்றும் ஜிதேந்திர ரெட்டி கூறினார்.

தெலுங்கானாவுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி இருப்பதால் அந்த கூட்டணியுடன் தற்போது நாங்கள் இல்லை என்றும் ஜிதேந்திர ரெட்டி தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பாக ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி நடந்துகொண்டியிருக்கிற இந்த நேரத்தில் ஆதரவு அளிப்போம் என்று ஜிதேந்திர ரெட்டி கூறியிருப்பது ஜனாதிபதி மாளிகையில் தனது வேட்பாளரை அமர வைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எங்களுடைய ஆதரவு தேவையாக இருக்கிறதா என்பதை மதிப்பீடு செய்த பின்னர் ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

டி.ஆர்.எஸ். கட்சியில் 15 எம்.பி.க்கள் உள்ளனர். மேலும் தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒரு எம்.பி.யும் டி.ஆர். எஸ். கட்சிக்கு ஆதரவு உள்ளது. உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெற்ற பின்னர் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மத்தியில் பா.ஜ. தலைமையில் உள்ள அரசுக்கு வாக்குகள் குறைவாக இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறுவார் என்று அந்த கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: