திருப்பதி கோவிலில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் வி.ஐ.பி. பிரேக் முறையில் தேவஸ்தானம் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாக இந்த தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அறங்காவல் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் லிஸ்ட்– 1, லிஸ்ட்–2, லிஸ்ட்–3 எனும் முறையை உடனடியாக தேவஸ்தானம் நீக்குகிறது. இதன் மூலம் சாமானிய பக்தர்களை கூடுதலாக அனுமதிக்கலாம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு வந்ததும் இதனை அமல்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு பதிலாக பழைய முறையை அமல்படுத்தும் திட்டமும் உள்ளது. அதாவது, அர்ச்சனைக்கு பின்அர்ச்சனை அனந்தர தரிசனம் எனும் பழைய முறையை அமல்படுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இன்னமும் ஓரிரு நாட்களில் திட்ட வட்ட அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.