முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: * 27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: ஆணையர் அறிவிப்பு

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 9 புதிய மாவட்டங்களுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட், கடந்த 6-ம் தேதி வழங்கிய ஆணையின்படி தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  வாக்குப்பதிவு காஞ்சிபுரம் , செங்கல்பட்டு வேலூர் , திருப்பத்தூர் , ராணிபேட்டை , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நாளை (9-ம் தேதி) வெளியிடப்படும். நாளை காலை 10 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் துவங்கும். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91, 975 பதவியிடங்களை நிரப்பிட நேரடித் தேர்தல் நடைபெறும். இதில்  27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 9,624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும். கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட போராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 38, 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வரும் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், பிரிதொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இத்தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவில் 24,680 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 25,008 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது . வாக்காளர்கள் - சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை ( data base ) கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ளது .

இத்தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்து 778 ஆண் வாக்காளர்களும், ஒரு கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 528 பெண் வாக்காளர்களும், 1,635 முன்றாம் பாலின வாக்காளர்களும் என ஆக மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் கட்டத் தேர்தலில் ஒரு கோடியே முப்பது லட்சம் வாக்காளர்களும், இரண்டாம் கட்டத் தேர்தலில் ஒரு கோடியே இருபத்து எட்டு லட்சம் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சித் தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13,062 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் தமார் 4,02,195 அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவியிடங்களைத் தவிர்த்து ஏனைய பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவிற்கு சுமார் 1,83,959 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நான்கு பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இதனை ஒரு முன்னோடி திட்டமாகக் கொண்டு 114 வாக்குச்சாவடிகளில் செயல்படுத்த உள்ளது .

தேர்தல் பார்வையாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ( IAS ) ஒருவர் விதம் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர். மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் - 27, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடங்கள் - 27, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்கள் - 314, ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் பதவியிடங்கள்- 314,  கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்கள்- 9,624 என மொத்தம் 10 ஆயிரத்து 306 பதவியிடங்களுக்கு மறைமுகத்தேர்தல் நடைபெறும்.

தேர்தல் நடத்தை விதிகள் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நடத்தை விதிகள் தொடரும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

தேர்தல் அட்டவணை:-
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்:-  9.12.2019
மனு தாக்கல் செய்ய கடைசிநாள்:-  16.12.2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை:-  17.12.2019
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்:- 19.12.2019
முதல் கட்ட வாக்குப்பதிவு- 27.12.2019
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு- 30.12.2019
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்:- ஜனவரி.  02
தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள்:-  ஜனவரி.  04

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து