உள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி

சனிக்கிழமை, 11 ஜனவரி 2020      அரசியல்
ADMK HEAD OFFICE 2020 01 11

தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் 14 இடங்களை அ.தி.மு.க.வே கைப்பற்றி உள்ளது. 12 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. மீதமுள்ள சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சம பலத்துடன் இருப்பதால் மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை. மொத்தமுள்ள 314 ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க.வே அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 27 மாவட்ட ஊராட்சிகளில் 13 மாவட்ட ஊராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கும் நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் அ.தி.மு.க. 14 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மீதமுள்ள சிவகங்கை மாவட்டத்தில் 2 கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதால் மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை.

அ.தி.மு.க. பெற்ற இடங்கள்:-

கோவை, தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், தேனி, நாமக்கல், திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், அரியலூர் ஆகிய மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை அ.தி.மு.க. தன்வசப்படுத்தி கொண்டது. சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது. மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 2 கட்சிகளும் தலா 13 இடங்களை கைப்பற்றி உள்ளன.

ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான 314 பதவிகளில் அ.தி.மு.க.வே அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. அங்கு அக்கட்சியின் பிரீதா என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டம் என்பதால் அங்கு அ.தி.மு.க. வெற்றி மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஒன்றிய துணை தலைவர் பதவிகளுக்கான 314 இடங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து