முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது: காங். அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் இருந்து சச்சின் பைலட்டுடன் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் என  அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.  அங்கு துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. 

அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பா.ஜ.க.வினர் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ராஜஸ்தானிலும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பா.ஜ.க. மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு 19 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அசோக் கெலோட்டின் குற்றச்சாட்டை பா.ஜ.க. மறுத்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியை கவிழ்க்கும் செயலில் ஈடுபடவில்லை எனவும், காங்கிரஸில் உட்கட்சி மோதல் நடைபெறுவதாகவும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் பூனியா விளக்கம் அளித்துள்ளார்.

சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியானது.  ராஜஸ்தானில் இருந்து சச்சின் பைலட்டுடன் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பி வந்து கொண்டிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜ.க. திட்டமிட்டு காய் நகர்த்தியது. ஆனால் அந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பா.ஜ.க.வின் சதியை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

தற்போது அவர்கள் ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. நினைத்தது நடக்காது. ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. பிரச்சினை தீர்ந்தது எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து