நவம்பர் முதல் கல்லூரிகளை திறக்க கர்நாடக அரசு திட்டம்

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      இந்தியா
Narayan 2020 10 20

Source: provided

பெங்களூர் : கர்நாடகாவில் நவம்பர் முதல் கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் நாராயண் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்க தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் நவம்பர் மாதம் முதல் கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் நாராயண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், நவம்பர் மாதம் முதல் நேரடி இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்காக கல்லூரிகளைத் திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

முதல்வர் எடியூரப்பா மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு விரைவில் முடிவு எடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். கொரோனா வைரஸ் நம் அனைவரின் மத்தியிலும் உள்ளது.

இதனால் ஏராளமான கலந்துரையாடல்கள், திட்டங்களுக்குப் பிறகு முடிவு எடுக்க வேண்டிய தேவை உள்ளது.  ஏற்கெனவே மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற முடிவெடுத்துள்ளோம். முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைகளைப் பின்பற்றிக் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து