மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை; சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      இந்தியா
Supreme Court 2020 11 02

Source: provided

புதுடெல்லி : அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூர பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.  ஆனால், இந்திய மருத்துவ குழுவின் 2000-வது ஆண்டின் மருத்துவ பட்டமேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது.  

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஐகோர்ட் உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசு மற்றும் சில மருத்துவ சங்கங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியதை தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில்  மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. 

இந்த உத்தரவின்படி, அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் இந்த ஆண்டு 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து