சென்னை மற்றும் கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

dhamu-18

Source: provided

கரூர்: சென்னை மற்றும் கரூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.  கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜி.பி.எஸ். கருவி கொள்முதலில் தகுதியுள்ள நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே ஜி.பி.எஸ். கருவிகளைக் கொள்முதல் செய்யப் போடப்பட்ட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. இது தொடர்பாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை எம்.ஆர். விஜயபாஸ்கர் மறுத்து வந்தார். 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், உறவினருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.  கரூர் செல்வநகரில் உள்ள எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறை மற்றும் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார், நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.  மேலும் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

ஊழல் புகாருக்கான ஆதாரங்கள் இந்த சோதனையில் சிக்கியுள்ளதா, ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இச்சோதனையை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து