வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

dhamu-16

Source: provided

சென்னை: தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது.  மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பருவ மழை காலத்தில் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி மழை பெய்வது வழக்கம். அந்த வகையில் வட மாநிலங்களில் பீகார், ஒடிசா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது.

இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று (23-ம் தேதி) உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாவதற்கான சாத்திய கூறுகள் முன்கூட்டியே ஏற்பட்டதால் நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு பகுதி உருவானது.  இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்து புயல் சின்னமாக மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுப்பெறுவதால் அது எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை வானிலை ஆய்வாளர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

வடமேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய தொடங்கும்.  நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து