முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: வழக்கு விசாரணைக்கு தடை கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும், வழக்கை முடிக்க பொது துறை உத்தரவிட்டதாக அறிக்கையில் லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால், பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது தேவையற்றது. செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது என்று கூறி, மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க தேவை எழுந்தது. இதுகுறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தும் உத்தரவிட்டனர். இந்த நிலையில்தான், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில், நியமிக்கப்பட்டார். கடந்த 5-ம் தேதி இவ்வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர். 

இந்நிலையில் 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே 3-வது நீதிபதி விசாரிக்க முடியும். எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து