முக்கிய செய்திகள்

இந்தியா - நியூசி. அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      விளையாட்டு
Captain-Ajinkya-Rahane- 202

கான்பூரில் இன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுகமாகிறார், கேப்டன் அஜின்கயே ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கையை நிர்ணயிக்கும் தொடராக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2 போட்டிகள்...

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியல் கேப்டன் விராட் கோலி தலைமைக்குப் பதிலாக துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பின் இந்திய அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கையுடன்... 

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கேப்டன் ரஹானே நேற்று நிருபர்களுக்குப்பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ இன்று தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்குகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூஸிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

முக்கிய வீரர்கள்...

ராகுலுக்கு காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார், விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் ஆகிய 3 நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இல்லாத சூழலில் இந்திய அணி களம் காண்கிறது. இது தவிர ரிஷப்பந்த், பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இளம் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது. ஆனால், சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல், ரவிந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகிய 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

நடுவரிசையில்... 

வேகப்பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா இருவருக்கு கட்டாயம் இடமுண்டு, கான்பூர் மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தால், 3-வது வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பில்லை. ராகுல், ரோஹித் சர்மா இல்லாததால், மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்குவார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் நடுவரிசையில் களம்காண்பார். ரஹானே, புஜாரா என நடுவரிசைக்கு பலம் சேர்க்கிறார்கள்.

பேட்டிங் ஃபார்ம்... 

கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்தே ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வருகிறது. இந்த தொடரில் ரஹானேவின் பேட்டிங்கை வைத்துதான் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்பதால் ரஹானேவுக்கு இது முக்கியமான டெஸ்ட் தொடராகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடருக்குச் சென்ற ரஹானே 7 இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே சேர்த்து 15.57 சராசரிவைத்துள்ளார். அதிகபட்சமாக 61 ரன்களை ரஹானே சேர்த்தார். ஆனால், ரஹானேவைவிட ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ராவின் சராசரி இந்தத் தொடரில் அதிகமாக இருந்தது.

மீண்டும் நம்பிக்கை...

இங்கிலாந்து தொடருடன் ரஹானே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருப்பார், ஆனால், லாட்ர்ஸ் மைதானத்தில் ரிஷப் பந்த்துடன் சேர்ந்து அரைசதம் அடித்தபின் தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை ரஹானே பெற்றுள்ளார். இந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் ரஹானே ஃபார்முக்கு வராவிட்டால், அணியிலிருந்து ரஹானே ஒதுக்கப்படுவது உறுதியாகிவிடும். நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸ் டெஸ்ட் தொடருக்கு திரும்பியுள்ளார். போல்ட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஜேமிஸன், சவூதி, நீல் வாக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சில் அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா, சான்ட்னர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் ஈஷ் சோதி சேர்க்கப்படவி்ல்லை.

ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுகம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று கேப்டன் ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார்.

உத்தேச இந்திய அணி

 1) சுப்மன் கில். 2) மயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) ஷ்ரேயாஸ் ஐய்யர், 5) ரஹானே (கேப்டன்), 6) சாஹா(விக்கெட் கீப்பர்), 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) ஆர் அஸ்வின், 10) முகமது சிராஜ், 11) இஷாந்த் சர்மா, 12) உமேஷ் யாதவ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து