முக்கிய செய்திகள்

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : தமிழகத்தில் இன்று அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (29-ம் தேதி): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30ம் தேதி: தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நவம்பர் 28-ம் தேதி (இன்று): குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (நவம்பர் 29-ம் தேதி): தெற்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, நவம்பர் 29, 30-ம் தேதிகளில் அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 1-ம் தேதி: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து