முக்கிய செய்திகள்

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்: கவர்னரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
CM-1 2021 11 27

நீட் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதியின்  ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கவர்னரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்தார். 

இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத்  தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள  பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. 

இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற கவர்னருக்கு அனுப்பப்பட்டது. 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, ஜனாதிபதியின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு ,தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கவர்னரை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 

இச்சந்திப்பின்  போது அமைச்சர் பெருமக்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து