முக்கிய செய்திகள்

பாராளுமன்ற முடக்கத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      அரசியல்
Mallikarjuna-Karge 2021-12-

பாராளுமன்ற முடக்கத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சிதலைவரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

பாராளுமன்ற மாநிலங்களவையில்  12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயாபச்சன் உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தரையில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சிதலைவரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான மல்லிகார்ஜூன கார்கே,  மாநிலங்களவையில் அவை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றார். அவைத் தலைவரை தாங்கள் தொடர்ந்து சந்தித்து விதி எண் 256 ன் கீழ் மட்டும்தான் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய முடியும் என்று குறிப்பிட்டதாகவும் கூறினார். ஆனால் அவர்கள் சட்டவிதிகளை மதிக்காமல் தவறாக அவை நிகழ்வுகளை நடத்தியதுடன் 12 எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு தமக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி எந்த விவாதம் இன்றி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் மூத்த எம்.பி. ஆனந்த்சர்மா குற்றம் சாட்டினார். அவசர சட்டம் மற்றும் சட்ட மசோதா தாக்கல் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த்சர்மா  வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து