முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி.-யின் மூன்றாம் சுரங்கத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: இ.பி.எஸ்.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதிதாக துவங்க உள்ள என்.எல்.சி.-யின் மூன்றாம் சுரங்கத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு மக்களின் கோரிக்கை அடிப்படையில் இழப்பீடு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

என்.எல்.சி. என்று அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் டி.எம். ஜம்புலிங்கம் முதலியார் முயற்சியாலும், நெய்வேலி மக்களின் தியாகத்தாலும், நாட்டுப் பற்றாலும், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கியதன் காரணமாக, 1956-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது.

தொடர்ந்து நெய்வேலி அனல்மின் நிலையமும் துவங்கப்பட்டது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில், லாபத்துடன் இயங்கும் ஒரு சில நிறுவனங்களில் என்.எல்.சி.-யும் ஒன்றாகும். லாபத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்க முயன்றபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்.எல்.சி. தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசின் சார்பாக சுமார் 5 சதவீத பங்குகளை வாங்கினார். இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மீதும், அதற்கு நிலம் வழங்கியவர்கள் மீதும், ஜெயலலிதாவும், தொடர்ந்து எனது தலைமையிலான அதிமுக அரசுக்கும் இருந்த அக்கறையும், கரிசனமும் இந்த தி.மு.க. அரசுக்கு இல்லாதது வேதனைக்குரியது. தற்போது என்.எல்.சி. நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பெரும்பாலான கிராமங்கள், கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் காணொலி மூலம் 17.1.2022 அன்று என்எல்சி நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு, ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகு களில் சென்ட்டுக்கு 40,000/- ரூபாயும், நகரப் பகு களில் 75,000/- ரூபாயும் வழங்கப்படும் என்றும்,

மேலும், மறு குடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில், 1,000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும் என்றும் என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும், ஒப்பந்த வேலை வாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. என்.எல்.சி. நிறுவனம் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களிடமோ, விவசாயிகளிடமோ, அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடமோ கருத்துகளைக் கேட்காமல், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத்திட்டத்தை ஒரு தலைபட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த அறிவிப்பை ஒரு சதவீத மக்கள்கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 

17.1.2022 அன்று என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தங்களுடைய சந்தேகத்தை, கேள்வியை எழுப்பியபோது, அதற்கு சரியான பதில் அளிக்காமல் பாதியிலேயே நிர்வாகம் கூட்டத்தை முடித்துக்கொண்டது. அப்போது, அதில் கலந்துகொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும், மக்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாமல், நிர்வாகத்துடன் இணைந்து கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டது, அப்பகுதி மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. என்.எல்.சி. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள், ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய நல்ல விளைச்சல் நிலங்களாகும்.

ஒரு ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 50 லட்சத்திற்கு மேல் ஆகும். அதேபோல், இன்று ஒரு சென்ட் வீட்டு மனை நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை உள்ளது. என்று கூறிய அப்பகுதி மக்கள், அதற்கேற்றவாறு நில இழப்பீட்டு மதிப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வசதியும் இழந்து பரம்பரைத் தொழிலான விவசாயத்தையும் இழக்கின்ற சூழ்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை சில ஆண்டுகளிலேயே செலவு செய்துவிட்டு, வறுமையின் பிடியில் சிக்கிக்கொள்ளக் கூடிய நிலையை கருத்திற்கொண்டு, நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிறுவனம் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 1956ம் ஆண்டு துவங்கப்பட்ட என்எல்சி நிறுவத்தின் ஆண்டு வருமானம் இன்று சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 1977-89 காலக்கட்டத்தில் நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர்.

இன்றைய தேதியில் சுமார் 11,510 நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய 44 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் எவரும் தற்போதும் பணிபுரியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது, என்எல்சி-க்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,500 நபர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, தினக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

ஏற்கெனவே, 2-ம் சுரங்கத்திற்காக நிலம் வழங்கியவர்கள், நிலத்தின் மதிப்பை உயர்த்தவும், நிரந்தர வேலை வழங்கக் கோரியும், என்எல்சி நிறுவனத்திடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். .

எனவே, இச்சட்டத்தைக் கருத்திற்கொண்டு, நிர்வாகம், நில உரிமையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு உயர் அ காரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, இப்பகுதி மக்களின் நில இழப்பீடு மற்றும் நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தையும், இதற்கான முழு முயற்சிகளையும் இந்த தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து