முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி ஓபன் - தொடர்ச்சியாக 5 தொடர்களில் இஹா சாம்பியன்

திங்கட்கிழமை, 16 மே 2022      விளையாட்டு
Iha-Champion 2022 05 16

Source: provided

இத்தாலி ஓபன் போட்டியில் ரோம் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் துனிசிய வீராங்கனை ஜபர் உடன் இஹா மோதினார். போட்டி ஆரம்பித்தது முதலே ஆதிக்கம் செலுத்திய இஹா, 6க்கு 2, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 5 ஏடிபி டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று இஹா ஸ்வியாடெக் சாதனை படைத்துள்ளார்.

___________________

சைமண்ட்ஸ் மறைவுக்கு ஹர்பஜன் சிங் இரங்கல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மே 14 ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தனது 46-வது வயதிலேயே சைமண்ட்ஸ் அகால மரணத்தை தழுவியது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அவருடன் பயணித்த வீரர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அந்த வகையில் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் உடன் பயணித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், அவரது மறைவு குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர், ''நேற்று காலை எழுந்ததும் எனது போனை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன், ஆண்ட்ரூ இப்போது இல்லை என்ற செய்தியால் நான் உடைந்து போனேன். அதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவர் மிகவும் வலிமையானவர். இது மிகவும் வருத்தமான விஷயம். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவு நம் அனைவருக்குமே இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

___________________

உலக 10,000 மீட்டர் ஓட்ட பந்தயம்:  கென்ய தடகள வீரர்கள் சாதனை

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 2022ம் ஆண்டுக்கான உலக 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தய போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில் சர்வதேச நாடுகளை சேர்ந்த பலரும் கலந்து கொள்வது வழக்கம். இந்த போட்டியில், கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் 4வது இடம் பிடித்த கென்யாவின் தடகள வீரரான நிகோலஸ் கிப்கோரிர் கிமெலி முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.

2014ம் ஆண்டு சக நாட்டு வீரரான ஜாப்ரி கம்வுரூர் படைத்த சாதனையை, 6 வினாடிகள் முன்பே இலக்கை அடைந்ததன் வழியாக முறியடித்து, நிகோலஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.  அவர் பந்தய தொலைவை 27.38 நிமிடங்களில் கடந்துள்ளார். 2வது இடம், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக 10 ஆயிரம் மீட்டர் நடப்பு சாம்பியனான எத்தியோப்பியாவை சேர்ந்த ததீசே வொர்குவுக்கு (27.43 நிமிடங்கள்) கிடைத்தது.  3வது இடம் கென்யாவின் கிபிவட் கண்டீக்கு (27.57 நிமிடங்கள்) கிடைத்து உள்ளது.

___________________

ராயுடு மன உளைச்சலில் இருந்தார்: சி.எஸ்.கே பயிற்சியாளர் விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வுப்பெறப்போவதாக கடந்த மே 14-ஆம் தேதி டுவிட்டரில் அறிவித்துவிட்டு பதிவை உடனே நீக்கினார். இதுகுறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அவ்வாறு ட்வீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்’ என கூறினார்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் ராயுடு இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.  அவர் கூறுகையில், ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

___________________

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பம் மூலம் அஞ்சலி 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 198 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அவர் இரு தினங்களுக்கு (மே 14) முன்னர் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது பாணியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதற்காக ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் சைமண்ட்ஸுக்கு மணலில் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். சைமண்ட்ஸ், ஆல்-ரவுண்டர் என்பதை குறிப்பிடும் விதமாக கிரிக்கெட் பேட் மற்றும் பந்தினை அவரது உருவ சிலைக்கு பின் பக்கம் இருக்கும் படி சிற்பம் செய்துள்ளார் சுதர்சன் பட்நாயக். சமூக வலைத்தளத்திலும், செய்திகளிலும் இது கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

___________________

இந்திய பேட்மிண்டனுக்கு மறக்க முடியாத நாள் - சச்சின் புகழாரம்

தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தியது. 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது.

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரும் இந்திய பேட்மிண்டன் அணியை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது., இந்தியர்கள் அனைவருக்கும் இது வரலாற்று தருணமாகும். இந்திய பேட்மிண்டனுக்கு மறக்க முடியாத நாளாகும். முதல் முறையாக தாமஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

___________________

இத்தாலி ஓப்பன் - 6-வது முறை ஜோகோவிச் சாம்பியன் பட்டம்

ஆறாவது முறையாக இத்தாலி ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஜோகோவிச். இது நடப்பு ஆண்டில் அவர் வென்றுள்ள முதல் சாம்பியன் பட்டமாகும். செர்பிய நாட்டை சேர்ந்தவர் 34 வயதான ஜோகோவிச். டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீரர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சில பிரதான டென்னிஸ் தொடர்களில் அவர் விளையாடவில்லை. அதே நேரத்தில் இதற்கு முன்னதாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப், மாட்ரிட் ஓப்பன், செர்பிய ஓப்பன் போன்ற டென்னிஸ் தொடர்களில் விளையாடி இருந்தார்.

இந்நிலையில், இத்தாலி ஓப்பன் தொடரில் பங்கேற்று விளையாடினார் அவர். இந்த தொடரில் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் 6-வது முறையாக அவர் இத்தாலி ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த தொடரின் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6 - 0, 7 - 6 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். முன்னதாக, அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆயிரம் வெற்றிகளை பதிவு செய்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!