முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க 23 நடமாடும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின் : 8 துணை இயக்குனர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
CM-5 2022 07 01

Source: provided

சென்னை : சென்னை, நொச்சிக்குப்பத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, காசநோய் உள்ள இடங்களில் வசிப்பவர்களிடம் காசநோய் உள்ளதா என்பதை கண்டறிய, முதல் கட்டமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  தற்போது இரண்டாம் கட்டமாக 23 மாவட்டங்களுக்கு தலா 46 லட்சம் ரூபாய் வீதம், 10 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 23 நடமாடும் வாகனங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.  

இவ்வாகனம் ஏழை எளிய மக்களைத் தேடிச் சென்று காசநோய் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களான நெரிசலான குடியிருப்புப் பகுதிகள், முதியோர் இல்லங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காசநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், காசநோய் கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும்.  காசநோய் உள்ளவர்களை கண்டறிய, அவர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்றவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் உள்ளதா என்பது கண்டறியப்படும்.  காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், 500 ரூபாய் உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படுவதோடு, அங்குள்ள மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.  

நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மின்வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.  இவ்வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ண தொலைக்காட்சி திரையும்,  முகாம்களின் போது மக்கள் வசதிக்காக நிழற்குடையும் இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.  ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் உள்ள இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் 5 லட்சம் நபர்களுக்கு காசநோய் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.  

 ஊட்டச்சத்து பெட்டகம்

காசநோயாளிகள் குணமடைய சிகிச்சை காலத்தில் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசியம்.  காசநோய் நோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகத்தில் தானியம், தினை மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை தன்னார்வலர்களால் வழங்கப்படுகிறது. காசநோயாளிகள் முழுமையாக குணமடைய அவர்களுக்கு தகுந்த ஊட்டச்சத்து உள்ள பொருட்களை வழங்கி, உறுதுணையாக இருந்த 100 தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை பாராட்டும் விதமாக முதல்வர், 10 தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியதோடு மூன்று காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்.    

பாராட்டு சான்றிதழ்

காசநோய் இல்லா தமிழகம்-2025 என்னும் இலக்கின்படி, 2015-ம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 217 காசநோயளிகள் என்று இருந்த விகிதத்தை 2025-ம் ஆண்டுக்குள் 44 காசநோயாளிகளாக குறைக்க வேண்டும்.  சிறப்பாக செயல்பட்டு, காசநோய் விகிதத்தை 40 விழுக்காடு குறைத்ததற்காக நீலகிரி மாவட்டத்திற்கும், 20 விழுக்காடு குறைத்ததற்காக திருவண்ணாமலை, கரூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் காசநோய் துணை இயக்குநர்கள் என மொத்தம் 8 காசநோய் துணை இயக்குநர்களுக்கு முதல்வர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்,

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின்,  த.வேலு, துணை மேயர் மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் முனைவர் செந்தில்குமார், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர்  சில்பா பிரபாகர் சதீஷ், பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எ.ஸ். செல்வவிநாயகம், மாநில காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் டாக்டர் ஆஷா பிரட்ரிக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து