முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித்துறையின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      சினிமா
Chennai-High-Court 2021 3

'புலி' திரைப்படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-17 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து