முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டஸ் புயல் தாக்கம்: கடலோர பகுதிகளில் புதுவை முதல்வர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
Rangasamy 2022 12 -09

மாண்டஸ் புயல் உருவெடுத்துள்ள நிலையில் கடலோர பகுதிகளில் நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார். 

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மாண்டஸ் புயலாக உருவெடுத்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. புயல் காரணமாக புதுவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலையில் வழக்கமான மக்கள் நடமாட்டம் இல்லை. பள்ளி செல்லும் வாகனங்கள், பெற்றோர்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று காலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகளவில் இருந்தது. அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழும்பி கரையில் மோதின. இந்த நிலையில் காலை 11 மணியளவில் முதல்வர்  ரங்கசாமி கடலோர பகுதிகளை பார்வையிட்டார்.  கடற்கரை சாலைக்கு வந்த அவர், காரில் இருந்தபடியே கடலின் சீற்றத்தை பார்த்தார். பின்னர் பழைய துறைமுகத்துக்கு வந்து இடிந்து நின்ற பாலத்தை பார்வையிட்டார். 

தொடர்ந்து அங்கிருந்த போலீசாரிடம், கடல் மணல் பரப்பில் மக்கள் இறங்காமல் தடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் பைக் மூலம் கடற்கரை சாலையில் மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தினர். புதுவையில் குறைந்த அளவிலான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. புயல் எச்சரிக்கையால் புதுவையில் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து