முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : அடுத்த மாதம் துவங்குகிறது :ஹர்மன்பிரீத்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      விளையாட்டு
Women s-cricket 2023 02 06

Source: provided

மும்பை  : முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் துவங்குகிறது என்று ஹர்மன்பிரீத் தெரிவித்தார்.

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் வருகிற 13-ந்தேதி மும்பையில் நடக்கிறது. வீராங்கனைகள் ஏலம் முதல்முறையாக நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் கவனச்சிதறல் ஏற்படுமா என்பது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது:- ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது. எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. ஒரு வீராங்கனையாக எது நமக்கு முக்கியமானது, கவனச்சிதறல் இல்லாமல் எப்படி அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது என்பது தெரியும். நாங்கள் எல்லோரும் ஓரளவு முதிர்ச்சியானவர்கள். எது முக்கியம் என்பதை அறிவோம். 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல (இந்திய ஜூனியர்) நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம். பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெண்கள் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) மற்றும் தி ஹன்ட்ரட் (இங்கிலாந்து) ஆகிய போட்டிகள் அவர்களது நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம். இதே போல் நமது நாட்டிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து