முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்திட வேண்டும்: அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
Stelin 2022 02 23

சென்னை, தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழகத்தில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்தது. 

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் பிரச்சினைகள் எழுகின்றன. எனவே மத்திய உள் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் அந்த கடிதத்தில், பிற மாநிலங்களில் திறம்பட செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களை போலவே, தமிழகத்திலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981-ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.  அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. 

இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது.  மேலும், தமிழகத்தில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருட்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.

கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச் சத்தினைப் பூர்த்தி செய்வதிலும்  ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.  

இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. 

இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், வெண்மை புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன் நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். 

அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.  மேலும் அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி விடும். 

, மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகள், பால்வளத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கி வருவதுடன், பால் உற்பத்தியாளர்களை அத்தொழிலில் ஈடுபடுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் உதவுவதாகவும், தன்னிச்சையான விலை உயர்விலிருந்து நுகர்வோரை பாதுகாக்கிறது. 

எனவே, இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து