முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் கொமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்      உலகம்
CM-2 2023-05-27

ஒசாகா, ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 23-ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதல்வர், அதை தொடர்ந்து கடந்த 25-ம் தேதி இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் சென்றடைந்தார்.  

அதனைத் தொடர்ந்து 26-ம் தேதி தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அதை தொடர்ந்து ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். கோமாட்சு நிறுவனம் கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் தொழில்துறை இயந்திரங்கள், வாகன தளவாடங்கள், மின்னணுவியல் போன்ற பிற வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிறுவனம், தமிழ்நாட்டில் கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் டம்ப் டிரக், சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழ்வாராய்வு இயந்திரம் போன்றவற்றை உலகளாவிய  தரநிலையுடன் தயாரித்து உள்நாடு மற்றும் சர்வதேச சந்தை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள்  டகாயுகி புரோகுஷி, கோ கமாடா ஆகியோருடன் கலந்துரையாடினார். அப்போது கோமாட்சு நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், முதல்வரிடம், இந்நிறுவனம் சர்வதேச தரத்தில்  உபகரணங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவித்தனர்.

இச்சந்திப்பின்போது, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த  முதல்வர், மேலும் தமிழகத்தில் உள்ள  கோமாட்சு தொழிற்சாலையை  விரிவாக்கம் செய்திடவேண்டும் என்றும் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம்  கோரிக்கை விடுத்தார்.  அதற்கு அந்நிறுவனத்தினர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து