முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது 'சென்னை' : போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மீட்பு பணிகள்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-3 2023-12-04

Source: provided

சென்னை : 'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகத்தின் தலைநகரம் சென்னை. அங்கு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசுமீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய 'மிக்ஜம்' புயல் கடந்த 3 நாட்களுக்கு முன் மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கிய போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் அன்று இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதிகனமழையாக கொட்டியது. மீனம்பாக்கத்தில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. பல்வேறு இடங்களில் வெள்ளநீரின் நடுவே இயக்கப்பட்ட இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பல பழுதாகி நின்றன. அவற்றை தள்ளிச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால், தங்கள் உடைமைகளை பாதுகாக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

இந்த நிலையில், நேற்று 'மிக்ஜம்' புயல் ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே பாபட்லா எனும் பகுதியை நோக்கி சென்று விட்டதால், தற்போது சென்னையில் மழை இல்லை. 2 தினங்களுக்குப் பிறகு வானம் தெளிந்து லேசான வெயில் அடிக்கிறது. பல்வேறு இடங்களில் வெள்ளம் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே மழைப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.முதல்வர் உத்தரவுக்கு இணங்க அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. தலைமைச் செயலக அதிகாரிகள் முதல் உள்ளாட்சி அதிகாரிகள் வரை இரவு பகலாக பணி செய்து வருகின்றனர். மின்விநியோகத்தை சீராக்க ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'மிக்ஜம்' புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது. தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் எங்கெல்லாம் மீட்பு பணிகள் நடந்து வருகிறது என்பது குறித்த விபரம் வருமாறு., மதுரவாயல், ஆவடி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். சென்னையில் பெய்து வரும் கன மழையால் மாங்காடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. மூலக்கொத்தலம் பகுதியில் தண்ணீரில் வீடுகள் முழ்கியுள்ளன. மேலும் 2 பேரிடர் மீட்புக்குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். மடிப்பாக்கம் ராம் நகர், பாலாஜிநகர், சீனிவாச நகர் பகுதிகளில் மழைநீர் வடியாததால் இடுப்பளவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆர்.கே.நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை படகுகள் மூலம் போலீசார் மீட்டனர். பம்மல், பொழிச்சலூர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 94454 77205 என்ற வாட்ஸ் ஆப் எண் , 04425619207, 04425619206, 04425619204 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். கழிநீர் அகற்றம் தொடர்பான புகாருக்கு 04445674567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து