முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      ஆன்மிகம்
Thirukalyanam

மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவில் நேற்று முன்தினம் இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நவரத்தினங்கள் பதித்த செங்கோல் மற்றும் சேவல் கொடி வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மானசனத்தில் புறப்பட்டு வந்தனர். 

சுவாமிகளை பசுமலையை அடுத்த மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருமண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள்.

 அங்கு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  அதே நேரம் பெண்கள் புதிதாக தங்களது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்.

பின்னர் திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 6.00 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார். 

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரில் கிரிவல பாதை வழியாக சுப்பிரமணிய சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு  தரிசனம் செய்து விட்டு செல்வர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து